செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (14:50 IST)

சூப்பரான நாட்டுக்கோழி வறுவல் செய்வது எப்படி...?

Nattu Kozhi Varuval
தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
சின்ன வெங்காயம்  - 250 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி விதைகள் (தனியா) - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்



செய்முறை:

முதலில் 1 கிலோ நாட்டுக்கோழியை வாங்கி கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் 250 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு, அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கடாயில் போட்டு எண்ணெய்யில் நன்கு கலந்து விட்டு தனி மிளகாய்த்தூள் போட்டு, தண்ணீர் 1/2 லிட்டர் ஊற்றி மிதமான தீயில் வைத்து 25 லிருந்து 30 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்து சுண்டி அப்படியே செமி கிரேவியாக எண்ணெய்ப் பிரிந்து வரும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.அத்துடன் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், சுவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.