வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மழைக்கால மருத்துவ முறைகளும் பயன்களும் !!

மழைக்காலங்களில் நமது அன்றாட உணவு சற்று சூடான பதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நன்றாக காய்ச்சி ஆற வைக்கப்பட்ட குடிநீரை பருகி வருவது உடல் நலத்திற்கு நல்லது.

மழைக்காலங்களில் துவைத்து காயவைக்கப்பட்ட துணிகளில் ஈரம் ஆறாமலேயே இருக்கும். துணிகளை மின்விசிறிகளை ஓடவிட்டு காயவைத்து பிறகு அணிந்து கொள்வது நல்லது. ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் படர் தாமரை, தோல் அரிப்பு போன்ற சருமம் சம்பந்தமான நோய்கள் இக்காலங்களில் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
 
மழைக்காலங்கள் கொசுக்களின் உற்பத்தி காலமாக இருக்கிறது. மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி, சிக்குன்குனியா போன்றவை கொசுக்களினால் ஏற்படும் நோய்களாகும். இதில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது. 
 
வீட்டில் கொசுக்கள் சேராமல் இருக்க நொச்சி செடிகளின் இலைகளை கொண்டு புகைபோடுவதால் கொசுக்களை விரட்டலாம். ஆரஞ்சு பழங்களின் தோல்களை நிழலில் உலர்த்தி, பின்பு அத்தோல்களை கொளுத்தி புகை போட்டால் கொசுத்தொல்லை நீங்கும். 
 
நிலவேம்பு கசாயத்தை அவ்வப்போது அருந்துவது மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் சித்த மருத்துவ முறையாகும்.
 
மழைக்காலங்களில் மற்ற எல்லா வயதினரையும் விட சுலபமாக நோய் பாதிப்பிற்குள்ளாவது குழந்தைகள் தான். எனவே பத்து வயதிற்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு மழைக்கால பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வது நல்லது. அவர்களின் உணவு, உடை, அருந்தும் நீர், உடல் சுகாதாரம் போன்றவற்றில் தூய்மை பேணப்படவேண்டியது மிகவும் அவசியம்.
 
மழைக்காலங்களில் சளி ஏற்பட்டு மூச்சிரைப்பு, கடும் இருமல் போன்றவை உண்டாகிறது. இச்சமயங்களில் ஒரு வெற்றிலையில் மூன்று மிளகு வைத்து, வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். துளசி, கற்பூரவல்லி செடிகளின் இலைகளை மென்று சாப்பிடுவதும் சிறந்த நிவாரணமாகும்.