திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்...!!

அகத்தி: கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம்  தணிந்து தலைவலி நீங்கும்.
அசோகு: அசோகு மரப்பட்டை - 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து  நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும்.
 
அமுக்கரா: அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும்.
 
அம்மான் பச்சரிசி: இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும். பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வலி குறையும். பூ 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப்  பாக்களவு பாலில் கலந்து 1 வாரம் உண்ண தாய்ப்பால் பெருகும்.
 
அறுகம்புல்: அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண்புகைத்தல் தீரும். 30 கிராம் புல்லை அரைத்து பாலில் கலந்து  பருக இரத்த மூலம் குணமடையும். 30 கிராம் புல்லை நன்றாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20-40 நாட்கள் வரை சாப்பிட உடல்  தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.
 
ஆடாதோடை: ஆடாதோடை மணப்பாகு 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட மார்ச்சளி, இருமல், காசம் ஆகியவை குணமாகும். குரல் இனிமை  உண்டாகும். ஆடாதோடை இலை - பங்குக்கு எட்டு பங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரை சீலையில் தோய்த்து  ஒற்றடமிட வீக்கம் கீல்பிடிப்பு இவை தணியும்.