1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (18:18 IST)

அடிக்கடி பருக்களால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க சில வழிகள் !!

முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம்.


பரு தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும். வடு இருக்காது.

கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.

பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு.

துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும். நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.

வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும். ஜாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.