திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல்நலம் காக்கும் முடக்கத்தான் கீரை; எப்படி....?

இந்த முடக்கத்தான் கீரை முடக்குவாதத்தை போக்குகிறது. முடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. 
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
 
முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது. முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத்  துவையலாக சாப்பிடலாம்.
 
எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான்  கீரைக்கு உண்டு.
 
இந்தக் கீரையை நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம்  வைக்கலாம். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை  செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
 
கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.
 
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும்  அகலும்.
 
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இந்தக் கீரையின்  சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும். வாய்வுத்  தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.