இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா வெந்தயக் கீரை...!
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும்.
மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.
இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது.
வெந்தயக் கீரை வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.