வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்...!!

இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரும் பெருகி விட்டனர், கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம்.
தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும்போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின்  முதுகுவலி, கண் உலர்ந்து காணப்படுதல், கண் எரிச்சல் போன்றவை கண்களுக்குண்டான பிரச்சனையை உறுதிப்படுத்தும். இந்த  பிரச்சனைகளுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்று பெயர். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் 80% பேருக்கு இந்த கம்ப்யூட்டர் விஷன்  சிண்ட்ரோம் வர வாய்ப்பு உள்ளது.
 
பெரும்பாலும் தலைவலி, தலையின் முன் அல்லது பின்பக்கமாகவும். சில நேரம் ஒரு பக்கத் தலைவலியாகவும் வரலாம். குறிப்பிட்ட நேரம்  ஓய்வு எடுத்தால், இது சரியாகி விடும். சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும்  வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 
கம்ப்யூட்டரை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கிற மாதிரி, அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்  கம்ப்யூட்டர்கள் இருக்கும் அறைகள், ஏர் கண்டிஷன் செய்யப்படுவதால், ‘ஏசி’யில் இருந்து வரும் காற்று, கண்ணுக்கு நேராகபடும்படி உட்காரக்  கூடாது.
கம்ப்யூட்டர் இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், அதிக அளவு வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ  இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும். 
 
கம்ப்யூட்டர் பணியின் போது, ஒவ்வொரு, 20 நிமிடத்துக்கு ஒரு முறையும், திரையில் இருந்து, கண்களை அகற்றி ஒரு குறிபிட்ட தொலைவில் ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இப்படி செய்யும்போது, கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கும்.
  
தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், கண்களை மூடி, வட்டச் சுழற்சி முறையில், ஒரு முறை  சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின், கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும். கம்ப்யூட்டர் அத்தியாவசியம் என்றான  பின், அதனால், கண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, இந்த முறைகளில் சரி செய்து கொள்ளலாம்.