21 வயதில் நீதிபதியாகும் வாலிபர்..
ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது 21 வயதில் நீதிபதியாகி சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரை சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் என்ற 21 வயது வாலிபர், ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பு படித்து வந்தார். ஐந்து வருட படிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நீதித்துறை பணிகளுக்கான தேர்வை எழுதினார். இதன் முதல் முயற்சிலேயே பிரதாப் சிங் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்படவுள்ளது.
நீதித்துறை பணிகளுக்கான தேர்வை எழுத 23 வயதே குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் 21 ஆக குறைக்கப்பட்டது. இத்தேர்வில் முதல் முயற்சிலேயே தேர்வு பெற்ற பிரதாப் சிங், இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனையை குறித்து பிரதாப் சிங், ”நான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்கு எனக்கு உறுதுணையாக இருந்து உதவிய எனது குடும்பத்திற்கும், பெற்றோருக்கும், நலன் விரும்பிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.