1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (10:30 IST)

நித்யானந்தா மீது பாய்ந்தது வழக்கு..

நித்யானந்தா குழந்தைகளை கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது இரண்டு பென் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நித்யானந்தா பல இடங்களில் ஆசிரமம் நடத்தி வரும் நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. அந்த கிளைக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் 4 குழந்தைகளை தங்க வைத்து சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து அந்த 4 குழந்தைகளில் 2 குழந்தைகளை போலீஸார் மீட்டு குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் நித்தியானந்தாவின் பெண் சீடர்களான சாத்வி பிரன்பிரிய நந்தா மற்றும் பிரியதத்வ ரித்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவரின் குழந்தைகள் என தெரியவந்தது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 4 மகள்களை நித்யானந்தா கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அதன் பின்பு ஷர்மாவுக்கு தெரியாமலேயே அவரது மகள்களை குஜராத் ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளனர்.

அதாவது அவரது மகள்களில் இரண்டு குழந்தைகளை ஆசிரமத்திற்கு சொந்தமான குடியிருப்பிலும், 21 மற்றும் 18 வயதான (லோகமுத்ரா ஷர்மா, நந்திதா ஷர்மா)  2 மகள்களை  ஆசிரமத்திற்கும் மாற்றியுள்ளனர்.

இதனை அறிந்த ஜனார்த்தன ஷர்மா, உடனடியாக அகமதாபாத்திற்கு விரைந்தார். குடியிருப்பில் அடைத்துவைக்கப்பட்ட இரண்டு குழந்தைகளை போலீஸார் மீட்டு ஷர்மாவிடம் ஒப்படைத்த நிலையில், தனது மூத்த மகள்களான லோகமுத்ரா மற்றும் நந்திதா ஆகியோரை சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்துவைத்துள்ளனர் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஷர்மா வழக்கு தொடுத்தார். இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பல பிரிவுகளில் அகமதாமாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.