ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்..
மேற்கு வங்கத்தில் ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மெயினாகுரி என்ற மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் பயிலும் மாணவர்கள் பலர் ஓடுலாபுரி என்ற நகரின் கிஸ் நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மாணவர்களில் இரு மாணவிகள் அங்குள்ள ரயில் பாலத்தில் தொங்கியபடி ரயில் வரும்போது செல்ஃபி எடுக்க ஆசைபட்டனர்.
அப்போது அலிப்பூர்த்தூர் நகருக்கு செல்லும் பயணிகள் ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் பாலத்தில் நின்றுக்கொண்டிருந்த இரு மாணவிகளும் ரயில் முன்பு தொங்கியபடி படம் வரும் வகையில் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது ரயில் வந்த வேகத்தில் ஒரு மாணவி காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளே சென்று விட்டார். அவர் மீது ரயில் மோதி சற்று தூரம் அவர் உடல் இழுத்துச்செல்லப்பட்டது. இச்சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.
அதே போல் ரயில் வேகமாக வருவதை பார்த்து பயந்துப்போன மற்றொரு மாணவி, ஆற்றுக்குள் குதித்தார். அந்த ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட மாணவிகள் படுகாயம் அடைந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி எடுக்க சென்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.