அணிமாறுகிறார்களா 12 எம்.எல்.ஏக்கள்: ஆட்சி ஆபத்து என்ற தகவலால் பரபரப்பு
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
இந்த நிலையில் 104 தொகுதிகளில் வென்ற பாஜக, எப்போது வேண்டுமானாலும் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தியின்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் பாஜகவுக்கு தாவவிருப்பதாகவும் இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலகோடி ரூபாய்க்கு விலை பேசப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை குற்றஞ்சாட்டி வந்த நிலையில் தற்போது வந்துள்ள இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.