1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (10:15 IST)

ஒரே மாதிரி இரண்டு பேர்.. பழிவாங்கும் ப்ளான் போட்ட பெண்! – உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசம் க்ரேட்டர் நொய்டாவில் தன்னை போலவே தோற்றம் கொண்ட பெண்ணை மற்றொரு பெண் சதி திட்டம் ஒன்றிற்காக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில் வசித்து வந்தவர் ஹேமா சவுதிரி. ஹேமா நொய்டாவில் வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 12ம் தேதி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அஜய் தாகூர் என்ற இளைஞரை கைது செய்தனர். அவரை விசாரித்ததில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியாகியுள்ளன.

அஜய் தாகூரின் காதலி பயல் பாஹ்தியும், ஹேமா சவுதிரியும் உருவ ஒற்றுமையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்துள்ளார்கள். பயலின் பெற்றோர் சில மாதங்கள் முன்னதாக தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலைக்கு காரணமாக உறவினர்களை பழிவாங்க பயல் தனது காதலுடன் அஜய்யுடன் திட்டமிட்டுள்ளார்.


அப்போதுதான் தன்னை போலவே உள்ள ஹேமாவை ஷாப்பிங் மாலில் பார்த்துள்ளார். தான் இறந்துவிட்டது போல செட்டப் செய்துவிட்டு உறவினர்களை பழிவாங்கலாம் என திட்டமிட்ட பயல் அஜய்யிடம் இதுபற்றி கூறியுள்ளார். ஹேமாவிடம் நெருங்கி பழகிய அஜய் நவம்பர் 12ம் தேதி அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார், அவரை ஆளில்லாத பகுதிக்கு கொண்டு சென்று பயலும், அஜய்யும் கொன்றுள்ளனர். பயலுக்கும், ஹேமாவுக்கு நிற வேறுபாடு இருந்ததால் கொதிக்கும் நீரை இறந்த ஹேமாவின் முகத்தில் ஊற்றி கொஞ்சமாக சிதிலமடைய செய்துள்ளனர்.

பின்னர் கொலைசெய்யப்பட்ட ஹேமாவை தூக்கில் தொங்கி இறந்த பயலாக உறவினர்கள் முன்பு செட்டப் செய்துள்ளார் அஜய். அந்த பெண் பயல்தான் என நம்பிய உறவினர்கள் அவரை அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில்தான் ஹேமா காணாமல் போன வழக்கு மூலம் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பயல் அவரது காதலன் அஜய் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். திரைப்படத்தை மிஞ்சும் இந்த குற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K