அயோத்தி வழக்கில் தீர்ப்பு: பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் வேண்டுகோள்
அயோத்தி வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு இருப்பினும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அயோத்தி வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் அரசியல் சாசன அமர்வு நாளை இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளது
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக கருதப்படும் இந்த தீர்ப்பின் காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அயோத்தி, மதுரா, வாரணாசி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
மேலும் உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு உள்ளது என்பதும் அது மட்டுமின்றி அனைத்து மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என்று உள்துறை அறிவுறுத்தல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழகத்தை பொருத்தவரை நாளைய தீர்ப்பின் போது எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது