பாஜகவின் பிடியில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்? - கர்நாடகாவில் குதிரை பேரம்
கர்நாடகாவில் மயமான 2 எம்.எல்.ஏக்கள் பாஜவின் பிடியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் முன் அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கர்நாடக சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ், பாஜக, மஜத கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கே.ஜி. போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அந்நிலையில், ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கவுடா என 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை. இது காங்கிரஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை பாஜக தங்கள் பக்கம் வளைத்து விட்டதாக என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் 2 பேரும் பாஜக வசம் இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ சோமசேகரின் பிடியில் அவர்கள் இருப்பதாகவும், ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள அந்த ஹோட்டலுக்கு டிஜிபி தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.