1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (11:34 IST)

கர்நாடக விவகாரம் : நேரலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே எடியூரப்பாவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர். 
 
எனவே. அவரையே தற்காலிக சபாநாயகராக ஆளுநர் நியமித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நேற்று இரவு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. 
 
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தற்காலிக சபாநாயகரை நீக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் போப்பையாவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனக்கூறி காங்கிரஸ் தொடர்ந்த இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 
 
அந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ்-மஜத தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் நடத்தப்பட வேண்டும். மேலும், வாக்கெடுப்பை தவிர எந்த அலுவலும் நடைபெறக்கூடாது.  நம்பிக்கை வாக்கெடுப்பை அனைத்து ஊடகங்களும் நேரலை செய்து கொள்ளலாம். இதன் மூலம் நேர்மையான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தனர்.
 
கர்நாடகாவில் யார் முதல்வர் என தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.