திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (16:48 IST)

நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்படவில்லை.! மம்தா கூறியது தவறு.! நிர்மலா சீதாராமன்...

Nirmala Sitharaman
நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
டெல்லியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில்,  ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது என்றும் ஒதுக்கப்பட்ட நேரம் ஒவ்வொருவர் மேஜை முன்பும் இருந்த திரையில் காட்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.
 
திரையிலேயே முதல்வர்கள் பேசுவதை பார்க்க முடியும் என்று அவர் கூறினார். அந்த வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாகவும்,  தனது மைக் துண்டிக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது என்றும் நேரம் முடியும்போது அதை நினைவூட்டுவதற்காக கூட்டத்தை நிர்வகித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மைக்கில் தட்டி ஒலி எழுப்பினார் என்றும் அவர் தெரிவித்தார். 

 
யாரெல்லாம் நேரத்தைக் கடந்து பேசினார்களோ அவர்கள் அனைவர் விஷயத்திலும் இது நடந்தது  என்று அவர் கூறினார். ஆனால், தனது மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது என்றும் அது உண்மையல்ல என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.