வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (12:09 IST)

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார்? குழப்பமான தகவல்கள்..!

Hasina
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்று காலை ஷேக் ஹசீனா பயணம் செய்த விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றதாகவும், ஆனால் இன்னொரு தகவல் ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே இருப்பதாகவும் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷேக் ஹசீனா அடைக்கலம் கோரியுள்ளளதாகவும், யுஏஇ அல்லது இங்கிலாந்தின் அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி இருப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால், நேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹசீனா இந்தியா வந்திறங்கிய வங்கதேச ராணுவ விமானம், இன்று காலை புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் ஷேக் ஹசீனாவும் இருந்தாரா? அல்லது இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர் இன்னும் இருக்கின்றாரா? என்ற கேள்வி எழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னதாக வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மாணவர்களுக்கும் அரசுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் போராட்டம் செய்த நிலையில் அந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி வங்கதேசமே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது/ இந்த நிலையில் தற்போது ராணுவத்தின் உதவியால் வங்கதேசத்தில் புதிய அரசு பதவி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran