புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (21:10 IST)

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கில் திடீர் திருப்பம்!

கடந்த ஜூலை மாதம் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதி கடிதம் ஒன்றில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் நடக்கும் குழு வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்து உடனடியாக பிரதமர் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் 49 பேர்களுக்கு எதிராக பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து 49 பேருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து பீகாரில் இந்த 49 பேருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதியப்பட்டு எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அரசியல் கட்சி பிரமுகர்களும் திரையுலகினர்களும் மத்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த வழக்கிற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் 49 பிரபலங்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை என தெரிகிறது