திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:25 IST)

தேச துரோக வழக்கு பாய்ந்த கலைஞர்களுக்கு ஆதரவாக கமல்!

தேச துரோக வழக்கு பாய்ந்துள்ள 49 கலைஞர்களுக்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியுள்ளார். 
 
இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. 
 
இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.
 
இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அரசியல் கட்சி தலைவர்களுக்கு, சினிமா துறையை சேர்ந்த சக கலைஞர்களும் வண்மையாக கண்டித்தனர். 
 
இந்நிலையல் அரசியல் தலைவரும் நடிகருமான கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பின்வருமாறு பதிவிட்டுள்ளார். இணக்கமான இந்தியாவையே பிரதமர் விரும்புகிறார். பாராளுமன்றத்தில் பிரதமரின் அறிக்கைகளும் அதை உறுதி செய்கின்றன. அதை மாநிலங்களும் அதன் சட்டங்களும் பின்பற்ற வேண்டாமா?

பிரதமரின் ஆசைக்கு முரணாக என் சக கலைஞர்கள் 49 பேர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளார்கள். நம் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வண்ணம், பீகாரிலிருந்து போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.