3 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பும் முஷரப்: அரசியலா? கைதா?
அரசியல் சட்டத்தை முடக்கி வைத்ததாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முசரப், 3 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஷரப் கடந்த சில மாதங்களாக ‘அமிலாய்டோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறிவிட்டதாகவும், இதனையடுத்து அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்னும் கட்சியை நடத்தி வரும் முஷரப், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும், இன்று அவர் பாகிஸ்தான் திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஷரப் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் அவர் பாகிஸ்தான் திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தற்போது இம்ரான்கானின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் இந்த நேரத்தில் மீண்டும் அரசியலில் நுழைந்ததால் தான் அடுத்த ஆட்சியை பிடிக்கமுடியும் என முஷரப் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது