அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
கர்நாடகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் நெல் மூட்டைகளை அதிக பணம் கொடுத்து வாங்கியதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை ஒரு குவிண்டால் ரூ.1,950 என்ற கணக்கில் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த விலையானது அரசு நிர்ணயித்த விலையை விட 4.4 சதவீதம் அதிகம் ஆகும். இதனால் மற்ற விவசாயிகளும் அந்த விலைக்கே தங்களது உணவு பொருட்களை விற்க முயல்வதால் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் தங்கள் பொருளுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பதில் தவறில்லை என விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.