1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (12:19 IST)

எஸ்பிஐ வங்கியின் கோரிக்கை நிராகரிப்பு..! தேர்தல் பத்திர விவரங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவு..!!

supremecourt
நாளை மாலை 5  மணிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
 
மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட கால அவகாசம் கூறுவது ஏன்  என்றும் தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கால அவகாசம் கேட்பது சரியல்ல என்றும் எஸ்பிஐ வங்கிக்கு தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியது. 
 
தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க முடியாது என்றும் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த பின்னர் 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


நாளை மாலை 5  மணிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,  மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.