1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:29 IST)

பொங்கல் அன்னைக்குதான் தேர்வு நடத்த தோணுமா? மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி!

Su Vengadesan

பொங்கல் திருநாளையொட்டி மத்திய அரசு பல்வேறு தேர்வுகளை நடத்துவது சுட்டிக்காட்டியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அந்த தேர்வு தேதிகளை மாற்றியமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. 

 

கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

 

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். 
 

ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர். 

 

ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் திரு பிரதீப் சிங் கரோலா இ.ஆ.ப அவர்களுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K