1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (17:09 IST)

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து..! ஆம் ஆத்மி வெற்றி..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

supreme court
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.
 
சண்டீகர்  மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது.

இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். மேலும் வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி மாற்றம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
 
இதை அடுத்து தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை திங்களன்று நடைபெற்றது.
அப்போது தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது.

உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார். அடையாளத்துக்காக 8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு சட்டவிரோதம் எனக் கூறி தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தேர்தலில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 
தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்,  தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டதோடு, குறிப்பிட்டு ஒரு கட்சியை சேர்ந்தவரை மேயராக தேர்வு செய்ய வாக்கு சீட்டுகளை தவறாக பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மேயர் தேர்தலில் அரசியல் சாசன பிரிவு 142 வழங்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்தி உள்ளது.