நீங்கள் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல, அமைச்சர்: உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்..!
சனாதன சர்ச்சை குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீங்கள் ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல அமைச்சர் என்று உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக அதிருப்தியை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் சனாதன குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது என்பதும் உச்ச நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொடுக்கப்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு குறித்த விசாரணையின்போது உதயநிதி மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவின்படி உங்கள் உரிமையை தவறாக பயன்படுத்துகிறீர்கள் என்றும் அதேபோல் சட்டப்பிரிவு 25ன் கீழ் உங்கள் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள் என்றும் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டு பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது
நீங்கள் ஒன்றும் சாதாரண மனிதர் இல்லை, ஒரு அமைச்சராக இருந்து பேசும்போது சொற்களில் கவனம் இருக்க வேண்டும், சொல்லின் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு மார்ச் 15ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது
Edited by Mahendran