களம் இறங்கிய ராம்ஜெத்மலானி : எடியூரப்பாவிற்கு சிக்கல்?
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி தொடர்பான வழக்கில் எடியூரப்பாவிற்கு எதிராக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி களம் இறங்கியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் மஜக கட்சியுடன்(37 இடங்கள்) இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் அவசரத்தை உணர்ந்து, இந்த வழக்கானது இன்று அதிகாலை 1.45க்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காங்கிரஸ் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் அளித்தபோதும், 104 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது தவறு என காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. பாஜகவின் பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என பாஜக தரப்பில் கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர். மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என்றனர். எடியூரப்பா ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இன்று காலை உச்ச நீதிமன்றம் நடுவர் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.
எடியூரப்பாவை முதல்வராக நியமித்தது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என ராம்ஜெத் மலானி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். பாஜகவிற்கு எதிராக ராம்ஜெத் மலானி களம் இறங்கியிருப்பது எடியூரப்பாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.