1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (17:49 IST)

முன்பதிவு பெட்டிகளில் மற்றவர்கள் ஏறினால்..? புதிய எச்சரிக்கை விடுத்த ரயில்வே துறை..!

Train
ரயில்களில் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறி பயணிகளுக்கு தொல்லை தரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரயில்வே துறை அதற்கு தகுந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்பதிவு செய்வதே நிம்மதியான பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் என்ற நிலையில் முன் பதிவு செய்யாதவர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி உட்கார்ந்து கொண்டு அடாவடி செய்யும் காட்சிகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ரயில்வே துறை இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது ரயில்வே துறை விதிகளை கடுமையாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்களில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் உரிய முன்பதிவு டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் மற்றும் முன்பதிவு செய்யாதவர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விடப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பின்னராவது முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்யும் போக்கு குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran