உபியில் நிரந்தரமாக தங்க பிரியங்கா காந்தி முடிவு: காங்கிரஸை பலப்படுத்த திட்டம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உபி மாநிலத்தில் நிரந்தரமாக தங்க அவர் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
கடந்த சில மாதங்களாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருசில தலைவர்கள் மாற்று கட்சிகளுக்கு மாறி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், பிரியங்கா காந்தியால் மட்டுமே உபி காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
இதனை ஏற்றுக்கொண்ட பிரியங்கா காந்தி உபியில் வீடு பார்க்க துவங்கி உள்ளதாகவும் விரைவில் அவர் குடும்பத்துடன் உத்தரப்பிரதேசத்தில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியின் வலுவான நிலையில் இருப்பதால், அங்கேயே சென்று தங்கி இருந்தால் மட்டுமே அந்த ஆட்சியை வீழ்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பிரியங்கா காந்தி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
மேலும் கட்சிக்குள் அதிக குழப்பங்கள் இருப்பதாகவும் நிர்வாகிகள் மத்தியில் கட்சி விரோத போக்கு அதிகம் இருப்பதாகவும் பிரியங்கா காந்தியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கட்சியை பலப்படுத்தவும் உபியில் தங்கி இருந்தால் மட்டுமே சாத்தியம் என அவர் முடிவு செய்துள்ளார்
வரும் 2022ஆம் ஆண்டில் உபி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொறுப்பாளர்களை மாற்றி, கட்சிக்கு புத்துணர்வு கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரியங்கா காந்திக்கு லக்னோவில் வீடு பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர் தனது குடும்பத்துடன் உத்தரப்பிரதேசத்தில் குடியேற இருப்பதாகவும் தெரிகிறது