காணொளி மூலம் 51 ஆயிரம் பேருக்கு அரசு வேலை.. பிரதமர் மோடி வழங்கினார்..!
மத்திய அரசின் பல்வேறு காலிப்பணியிடங்களில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதத்தை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் வழங்கினார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் நியமன கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு அவர் பேசும் போது, தீபாவளி பண்டிகை நன்னாளில் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு நியமன கடிதம் வழங்கப்படுவதை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன் என்றார்.
லட்சக்கணக்கானோருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதற்கான பணியை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து செய்து வருகிறது என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட கூடுதலாக அரசு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது கைத்தறி விற்பனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நெசவாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பலனளிக்கும் வகையில் கைத்தறித் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த வளர்ச்சி கைத்தறித் தொழிலுக்கே அல்லாமல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் நன்மை தரும் என்றும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவும் வழி வகுக்கும் என்றார். அவரது இந்த காணொளி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
:
Edited by Siva