ஒடிசா கடற்கரை அருகே மூழ்கிய சரக்கு கப்பல்.. கப்பலில் இருந்த 24 பேரில் 2 பேர் மட்டுமே மீட்பு..
ஒடிசா கடற்கரையில் இருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் ஒன்று சனிக்கிழமை கடலில் மூழ்கியது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதி இரவு 10.30 மணியளவில் புறப்பட்ட MV Ocean-Winner என்ற கப்பல், சுமார் 1,700 டன் இரும்பு தாதுவை ஏற்றி சென்றது.
சிங்கப்பூர் நோக்கி சென்ற இந்தக் கப்பலில் மொத்தம் 24 பேர் இருந்தனர். அவர்களில் 20 பேர் சீனாவை சேர்ந்தவர்கள், 3 பேர் மியான்மரை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 11.48 மணியளவில் கப்பலுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கப்பலை இயக்கி வந்த நிறுவனம், தேடுதல் மற்றும் மீட்பு உதவி கோரி தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளன. கடலோர காவல்படையின் Varad மற்றும் Anmol கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து Vijit என்ற மற்றொரு கப்பலும் தேடுதல் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை உயிர்காக்கும் படகுகளில் இருந்த 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் செல்லும் மற்ற கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Edited by Siva

