செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (13:28 IST)

பிரச்சினை செய்தால் வீட்டை இடிப்போம்..? – உ.பி துணை முதல்வர் எச்சரிக்கை!

Demolish House
உத்தர பிரதேசத்தில் நுபுர் சர்மாவை கைது செய்ய போராட்டம் நடத்தியவர் வீடு இடிக்கப்பட்ட நிலையில் அம்மாநில துணை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தில் அவ்வாறாக போராட்டம் நடைபெற்றபோது சில இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக உத்தர பிரதேசத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரயாக்ராஜில் வன்முறைக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் அகமது என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீடும் இடிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதால் இடிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல ஷகாரன்பூரில் போராட்டத்தில் காவலர்கள் மீது வீசியதாக கைது செய்யப்பட்ட இருவரின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் “வளர்ச்சி பணிகளில் தடைகளை உருவாக்குபவர்களுக்கு உத்தர பிரதேசத்தில் இடமில்லை. பிரச்சினை செய்தால் தொடர்ந்து புல்டோசர்கள் பயன்படுத்தப்படும். சட்டம், ஒழுங்கை கடைபிடிப்பவதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகவும் கண்டிப்பானவர். சமூக விரோதிகளின் செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது” என பேசியுள்ளார்.