1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (11:57 IST)

”ரிசர்வ் வங்கியில் பணத்தை திருடவில்லை”.. நிதியமைச்சர் விளக்கம்

ரிசர்வ் வங்கியிலிருந்து பாஜக பணம் திருடுவதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர் கட்சியை சேர்ந்த பலரும் குற்றம் சாட்டினர். ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியை திருடுவதால் பயனில்லை, பொருளாதார சீரழிவில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என தெரியாமல், பாஜக அரசு குழப்பத்தில் இருக்கிறது என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

“ஆர்.பி.ஐ உபரி நிதி குறித்து ராகுல் காந்தி அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர்களிடம் ஆலோசனை நடத்திருக்க வேண்டும். அப்படி ஆலோசனை நடத்தாமல் அவர்கள் வைக்கும் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பவில்லை” என கூறினார்.

மேலும் அந்த பேட்டியில், உபரி நிதி தொடர்பாக முடிவெடுப்பதற்காக, பிமல் ஜலான் குழுவை ரிசர்வ் வங்கி தான் அமைத்தது. பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பலமுறை அலோசித்த பிறகே உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க அந்த குழு முடிவு செய்தது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.