ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (12:04 IST)

மழை தணிந்தது: மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை, இன்று சற்று தணிந்திருப்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

மகாரஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்தது. மும்பையில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் ரயில், பேருந்து போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்திருந்தது.

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறையும் அளித்தது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் கனமழை சற்று தணிந்திருப்பதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

வெள்ளத்தால் முடங்கியிருந்த பேருந்துகளும் ரயில்களும் தற்போது இயங்க தொடங்கியுள்ளது. கனமழையால் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரும் வற்ற ஆரம்பித்ததால் போக்குவரத்து சீராக உள்ளதாக தெரியவருகிறது.

ஆனால் வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளதால், தற்போதைய நிலையில் பள்ளி கல்லூரிகளும் அரசு அலுவலகங்களும் திறக்கப்படமாட்டாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக தெரிகிறது.