வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : செவ்வாய், 20 மே 2014 (15:31 IST)

தாய்க்கு மகன் பணிபுரிவதை உதவி என சொல்ல முடியுமா? - நரேந்திர மோடி

பாஜக நாடாளுமன்றக் குழுவில் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேசிய மோடி, மக்களின் எதிர்ப்பார்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவேன் என பேசினார்.
நாடெங்கும் நடந்து முடிந்த 16வது நாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை பிரதமராக பாஜக நாடாளுமன்றக் குழு தேர்வு செய்தது.
 
இது தொடர்பாக முடிவு செய்ய இன்று கூடிய பாஜக நாடாளுமன்றக் குழுவில் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியின் பெயரை பாஜக மூத்த தலைவர் அத்வானி முன்மொழிய,  பிற தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோர் வழிமொழிந்தனர். 
 

இதன் பின் பேசிய மோடி, 'என்னை பிரதமராக தேர்வு செய்த பாஜக நாடாளுமன்ற குழுவிற்கு நன்றி.
 
இது ஜனநாயகத்தின் கோவில், இங்கு பதவி முக்கியமல்ல, 125 கோடி இந்தியர்கள் நமக்கு அளித்துள்ள பொறுப்புதான் முக்கியம். 
நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது கட்சிக்கு செய்த உதவி என  அத்வானி பேசினார். தாய்க்கு மகன் பணிபுரிவது கடமை அதை உதவி என சொல்ல முடியுமா?
 
இந்திய மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. ஆட்சி அமைக்கயிருக்கும் புதிய அரசு ஏழைகள், இளைஞர்கள், சகோதரிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு பாடுபடும்.
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இங்கு இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். 
 
இதற்கு முன் இந்தியாவில் ஆட்சி அமைத்தவர்கள் அவர்களால் முடிந்ததை செய்தனர். அவர்கள் நாட்டின் நலனுக்காக செய்தவற்றை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.நாட்டு மக்களின் எதிர்ப்பார்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் நான் செயல்படுவேன்' என பேசினார்.