1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (09:06 IST)

தமிழக எம்பியாகும் முன்னாள் பிரதமர்! மு.க.ஸ்டாலின் சம்மதிப்பாரா?

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் மாநிலங்களவை எம்பி பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால் அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை அசாம் மாநிலத்தில் இருந்துதான் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வந்தார். ஆனால் அம்மாநிலத்தில் தற்போது எம்பியை தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் இல்லை. எனவே அவர் வேறொரு மாநிலத்தில் இருந்துதான் எம்பியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கனிமொழி, கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்னவேல், டி.ராஜா ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2019 ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்கை மாநிலங்களவை எம்பியாக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி, மு.கஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்
 
தமிழகத்தில் காலியாகும் ஆறு எம்பிக்களில் மூன்று அதிமுகவுக்கும் மூன்று திமுகவுக்கும் போகும். அதில் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கவிருப்பதாக திமுக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மன்மோகன்சிங் அவர்களுக்காக ஒரு எம்பி பதவியை விட்டுக்கொடுத்துவிட்டால் திமுகவுக்கு ஒரே ஒரு எம்பி பதவி மட்டுமே மிஞ்சும். எனவே இதுகுறித்து திமுக ஆலோசித்து வருவதாகவும், ஆனாலும்  ஐந்து முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன்சிங் அவர்களுக்காக திமுக விட்டுக்கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது