வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (07:48 IST)

திமுகவுக்கு வாக்களித்திருப்பது எவ்வளவு பெரிய கேடு: நமது அம்மா விமர்சனம்

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் திமுக ஆதரவு நாளேடான 'முரசொலி' மு.க.ஸ்டாலினை போற்றி புகழ்ந்தும், அதிமுக ஆதரவு நாளேடான 'நமது அம்மா' திமுகவை வசை பாடியும் மாறி மாறி கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன
 
அந்த வகையில் இன்றைய நமது அம்மா நாளிதழில் திமுகவுக்கு வாக்களித்திருப்பது எவ்வளவு பெரிய கேடு என்பதை மக்கள் உணர்வார்கள் என்று தலையங்கம் எழுதியுள்ளது. இந்த தலையங்கத்தில், 'உண்மைக்கு மாறாக பொய்யான பிரச்சாரங்களை செய்து, ஊடக கூலிகளை உடன் வைத்து கொண்டு கட்டுக்கதைகளை திமுக அவிழ்த்துவிட்டதாகவும், ஏழை எளிய மக்களை ஏமாற்றி பாஜக கூட்டணியை திமுக வஞ்சகத்தால் வென்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தது எவ்வளவு பெரிய கேடு என்பதை உணர தொடங்கிவிட்டதாகவும், அதேபோல் ஓட்டு போட்ட மை காய்வதற்குள் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை பாஜக கூட்டணி அள்ளித்தந்து கொண்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த இரு பத்திரிகைகளும் ஒருவர் மீது ஒருவர் அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்வது ஊடகத்தர்மத்திற்கு நல்லதல்ல என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.