போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட யுஜிசி.. மாணவர்கள் ஜாக்கிரதை..!
போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சேர்ப்பதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
யுஜிசியின் சட்ட விதிகளின்படி, அவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளும், சான்றிதழ்களும் மட்டுமே உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை. ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள் கவர்ச்சியாக விளம்பரம் செய்து, மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கி பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவர்களின் முன்னேற்றமும் பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, போலியான கல்வி நிறுவனங்கள் யுஜிசி மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் பட்டியல் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் சேரும் முன்பு, மாணவர்களும் பெற்றோரும் அவற்றை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.
போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva