செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2024 (07:32 IST)

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் தினமான ஜனவரி 15 மற்றும் 16ஆம் தேதி யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதி தேர்வான யுஜிசி நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த முறை தேர்வு நடைபெறும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 85 பாடங்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பொங்கல் திருநாளான ஜனவரி 15 மற்றும் மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் சில பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையம் தேர்வுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை, தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டால், தேர்வர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் இருக்கும் நிலை ஏற்படும். இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு தமிழக தேர்வாளர்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் இடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva