வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (13:05 IST)

வயநாடு நிலச்சரிவு.! 6-வது நாளாக மீட்பு பணி.! உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்..!!

Kerala Landslide
கேரள மாநிலம் வயநாட்டில் ஆறாவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடையாளம் காணப்படாத 66 உடல்களை அடுத்த 72 மணிநேரத்தில் உரிய வழிகாட்டுதல்களுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மீட்புப் பணி அதிகாரிகளுக்கு கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் உருகுலைந்து போயின. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது.
 
வயநாடு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இன்றும் 2 அடையாளம் தெரியாத உடல்கள் மீட்கப்பட்டன. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Landslide
மொத்தம் 1208 வீடுகளை நிலச்சரிவு காவு வாங்கி இருக்கிறது. முண்டக்கை பகுதியில் 540, சூரல்மலையில் 600, அட்டமலையில் 68 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயுள்ளன. 3,700 ஏக்கர் விளைநிலமும் நாசமாகிப் போனது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 49 குழந்தைகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

மேலும் மீக்கப்பட்ட 66 பேரின் உடல்கள் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்   அடையாளம் காணப்படாத 66 உடல்களை அடுத்த 72 மணிநேரத்தில் உரிய வழிகாட்டுதல்களுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மீட்புப் பணி அதிகாரிகளுக்கு கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

அடையாளம் காணப்படாத அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து, மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்கவும் கேரளா அரசு ஆணையிட்டுள்ளது.