1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (16:49 IST)

அடுத்தது நீங்களாக கூட இருக்கலாம்..! – எச்சரிக்கை விடுத்த காஷ்மீர் பயங்கரவாதிகள்!

Kashmir
காஷ்மீரில் வங்கி மேலாளரை கொன்ற காஷ்மீர் பயங்கரவாதிகள் விடுத்துள்ள எச்சரிக்கை கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது அங்குள்ள பயங்கரவாத கும்பல் படுகொலைகளை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் என்ற மாவட்டத்தில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த விஜயகுமார் என்பவரை வங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். 

துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . கடந்த 2 நாட்கள் முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இந்து பண்டிட்டான பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று வங்கி மேனேஜர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த மே மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வங்கி மேலாளர் கொலைக்கு காஷ்மீர் சுதந்திர போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

மேலும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை கடிதத்தில், காஷ்மீரின் வரைபடத்தை மாற்ற முயலும் அனைவருக்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்றும், மோடி தலைமையிலான அரசு குடியமர்த்த நினைக்கும் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அல்லாத அனைவருக்கும் இது ஒரு பாடம் என்றும், இங்கு வசிக்க விரும்புபவர்கள் உயிரை விலையாக கொடுக்க வேண்டியிருக்கும், அது நீங்களாக கூட இருக்கலாம் என எச்சரிக்கும் தோனியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.