யார் வேணாலும் போகலாம் விண்வெளி சுற்றுலா; இஸ்ரோவின் அடுத்த திட்டம்!
மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்து செல்லும் முயற்சியில் பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வகையில் இஸ்ரோவும் இதில் இணைந்துள்ளது.
ஒரு காலத்தில் வானத்தில் பறப்பது மனிதர்களுக்கு மிகப்பெரும் கனவாக இருந்தது. பல கால கனவை விமானங்களின் வருகை நிறைவேற்றியது. அதுபோல தற்போது விமான பயணம் சாதாரணமாகிவிட்ட நிலையில் மனிதர்களின் கனவாக விண்வெளி பயணம் மாற தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் விண்வெளிக்கு கமர்ஷியல் சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மக்களை பெரும் பொருட்செலவில் விண்வெளி அழைத்து செல்ல திட்டமிட்டு வருகின்றன. மில்லியன்களில் பணத்தை செலுத்தி இந்த பயணத்திற்காக பல பணக்காரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படியான கமர்ஷியல் விண்வெளி பயணத்திட்டத்தை தொடங்க இஸ்ரோவும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2030க்குள் மனிதர்களை விண்வெளி அழைத்து செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சுற்றுலா செல்லும் நபர் 15 நிமிடங்களை விண்வெளியில் கழிக்கலாம். இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.6 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செயற்கைக்கோள் ஏவுதலில் நாசா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் முன்னிலையில் இருந்த சமயத்தில், இஸ்ரோ செயற்கைக்கோள் ஏவுதலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இன்றளவும் கமர்ஷியல் சாட்டிலைட் ஏவும் வணிகத்தில் முன்னணியில் உள்ளது. அதுபோல இஸ்ரோவின் இந்த விண்வெளி பயண சுற்றுலா திட்டமும் பலநாட்டு செல்வந்தர்களையும் ஈர்க்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K