நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
தொகுதி மறுசீரமைப்பை எதிர்நோக்கி தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள்
இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை விவாதிப்பதற்காக, கடந்த 5.3.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக,
இப்பிரச்சினையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைப்பது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல்.
இப்பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
இதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்புதல்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் கடிதம்
இதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்களுக்குக் கடந்த 7.3.2025 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில்,
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்பது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினை அல்ல, அது கூட்டாட்சி கொள்கையை பாதிக்கக்கூடியது.
இதனால் அரசமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாக்க உரிய தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
மேலும், தெற்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம், ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) இணைந்து பணியாற்ற, பாதிக்கப்படக்கூடிய மாநிலக் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்குமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
முதலமைச்சர்களின் கூட்டம் - முக்கிய பங்கேற்பாளர்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, இன்று (22.3.2025) சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று தொடக்க உரை ஆற்றினார். பின்னர்,
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி - கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் - காணொலிக் காட்சி மூலம் தனது கருத்துகளை பகிர்ந்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.
முக்கிய தீர்மானங்கள்
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
மத்திய அரசு வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஆலோசிக்கவும், பங்களிக்கவும் கூடியதாக இருக்க வேண்டும்.
42-வது, 84-வது, 87-வது அரசியலமைப்புத் திருத்தங்களின் நோக்கத்திற்கேற்ப, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
மத்திய அரசு இதற்கான தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள்.
முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் இணைந்து வலியுறுத்துவார்கள்.
மாநில சட்டமன்றங்களில் இதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
மக்களிடையே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரலாறு, சூழல் மற்றும் அதன் விளைவுகளை எடுத்துரைப்போம்.
Edited by Mahendran