1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (12:25 IST)

பீகாரில் நிதீஷ் குமார் ஆட்சி தப்புமா..? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.! 6 எம்.எல்.ஏக்கள் மாயம்.?

nithish kumar
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீகார் சட்டசபையில்  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் திடீரென மாயமாகி உள்ளதால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் 2020-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
 
இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
 
கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது  பீகார் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
 
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நிலையில் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 எம்எல்ஏக்கள் உள்ளனர். 
 
இந்த நிலையில், நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி 6 எம்.எல்.ஏக்கள் மாயமாகி உள்ளனர். இந்த 6 பேரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறப்படுகிறது.


நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மாயமான ஆறு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என்றால் நிதீஷ் குமார் அரசு கவிழும் நிலை ஏற்படும். பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி தப்புமா? அல்லது கவிழுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.