எக்கசக்கமாய் கட்டணம் வசூலிக்கும் தனியார் ரயில்! – மக்கள் புகார்
இந்தியாவின் முதல் தனியார் ரெயில் மத்திய அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ் கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்கியுள்ளது. இந்த ரயிலை இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் நிறுவனமான ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. லக்னோ முதல் டெல்லி வரை சுமார் 500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் இந்த ரயில் நவீன முழுவதும் குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகள் மற்றும் நவீன ஊனவக வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
அதிநவீன வசதிகளுடன் ஆடம்பரமாக உள்ள இந்த ரயிலில் பயணம் செய்ய மக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதே லக்னோ – டெல்லி இடையே பயணப்படும் மற்ற ரயில்களை காட்டிலும் அதிமான தொகையை ஐஆர்சிடிசி வசூல் செய்வதாக ரயில்வே அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
ரயில்கள் தனியார் மயமாக்கப்பட்டாலும் சட்டப்படி அவற்றிற்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைதான் தனியார் ரயில்கள் வசூலிக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தேஜஸ் ரயிலில் ஏசி படுக்கை வசதிக்கு 2,450 ரூபாயும், ஏசி இருக்கை வசதிக்கு 1500 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மற்ற அரசு ரயில்கள் வசூலிக்கும் தொகையை விட மிக அதிகமானதாகும்.
2021க்குள் மேலும் பல வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதற்குள் அரசு தனியார் ரயில்களுக்கு முறைப்படுத்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.