1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (14:50 IST)

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானம்: தயார் நிலையில் மத்திய அரசு

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ள வுகான் பகுதிகளில் உள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை சீனா அனுப்ப உள்ளது இந்தியா.

சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 160 பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவியுள்ள வுகான் பகுதியில் சுமார் 300 முதல் 500 வரையிலான இந்திய மக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ படிப்பு மாணவர்கள். அவர்களை அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக மீட்டு வர வேண்டும் என பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அங்குள்ள இந்தியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஒருங்கிணைத்து இந்தியா அழைத்து வர டெல்லியிலிருந்து ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் புறப்பட தயாராய் காத்துள்ளது. ஏற்கனவே புறப்பட இருந்த விமானம் சீன அரசின் அனுமதி கிடைக்காததால் காத்திருப்பில் உள்ளது.

சீன அரசாங்கம் அனுமதி அளித்தவுடன் உடனடியாக புறப்பட்டு செல்லும் விமானம் இந்தியர்களை மீட்டு இந்தியா கொண்டு வரும் என கூறப்படுகிறது.