இந்தியாவில் உயிரிழந்த காம்பியா நாட்டு துணை அதிபர்! – இரங்கல் தெரிவித்த அதிபர்!
காம்பியா நாட்டின் துணை அதிபர் இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் அதிபராக இருந்து வருபவர் ஆடமா பெர்ரோ. இந்த நாட்டின் துணை அதிபராக கடந்த ஆண்டு முதலாக பதரா ஆலியூ ஜூப் பதவி வகித்து வருகிறார். இவர் இதற்கு முன்னர் 5 ஆண்டு காலமாக காம்பியா நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தவர்.
65 வயதாகும் பதரா ஆலியூ ஜூப் கடந்த சில வாரங்கள் முன்னதாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காத நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இந்தியா கொண்டுவரப்பட்டார்.
இந்தியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு காம்பியா நாட்டு அதிபர் ஆடமா பெர்ரோ இரங்கல் தெரிவித்துள்ளார். காம்பியா நாட்டின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காம்பிய அரசுக்கு தேவையான உதவிகளை இந்திய வெளியுறவுதுறை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K