திருப்பதி கோவிலில் மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு..!
வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் இலவச தரிசன டோக்கன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 23ஆம் தேதியிலிருந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழிபாடு மற்றும் புத்தாண்டுக்காக இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் மீண்டும் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் நாளை அதாவது செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்குகிறது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4 மணியிலிருந்து இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த டோக்கன்களை வைத்து மதியம் 12 மணியில் இருந்தே கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபடலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Edited by Siva