மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ்? ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
கடந்த சில ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பா உள்ளிட்ட சில பகுதிகளில் ஒருசிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் லட்சக்கணக்கான உயிர்களை பறித்த இந்த தொற்று, தற்போது உருமாறிய புதிய வடிவில் பரவி வருவதாக கூறப்படுவது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது போன்ற பாதுகாப்பு முறைகளை மீண்டும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வைரஸ் பரவலை ஆரம்ப நிலையிலேயே தடுக்க தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உருமாறிய வைரஸ் என்பதால் பொதுமக்களிடையே எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
