1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 5 ஜூன் 2025 (14:04 IST)

பென்குயின்களுக்கு ஆங்கில பெயரா? மராத்தியில் பெயர் வைக்க சொல்லி பாஜக போராட்டம்!

Byculla Penguins

மகாராஷ்டிராவில் உள்ள பூங்கா ஒன்றில் பிறந்த பென்குயின்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் பூங்காவை மறித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிராவில் மொழிப்பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. இந்தி, ஆங்கில மொழிகள் பயன்பாட்டை எதிர்த்தும், மராத்தி மொழி பயன்பாட்டை ஆதரித்து பல கருத்துகள் வலம் வருகின்றன. மகாராஷ்டிரா பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை சேர்க்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஒருபடி மேலே போய் பென்குயின்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டதற்கு பாஜகவினர் போராட்டம் நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பைக்குலாவில் செயல்பட்டு வரும் உயிரியல் பூங்காவில் பென்குயின்கள் சில வளர்க்கப்பட்டு வருகின்றன. ஹம்போட் ரக பென்குயின்களான இவை 2016ல் தென் கொரியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை.

 

அதில் இரண்டு ஜோடி பென்குயின்கள் சமீபத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது. புதிதாக பிறந்த மூன்று பென்குயின்களுக்கும் நோடி, டாம், பிங்கு என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பைக்குலா பாஜகவினர் பூங்காவை மறித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள் முன்னர் வந்த பென்குயின்கள் வெளிநாட்டில் இருந்து வந்ததால், அவை பெயர் ஆங்கிலத்தில் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் இந்த பென்குயின் குட்டிகள் மகாராஷ்டிர நிலத்தில் பிறந்துள்ளன. அவைகளுக்கு மகாராஷ்டிராவின் மொழியான மராத்தியில்தான் பெயர் வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K