1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (21:11 IST)

என்.ஐ.ஏ மசோதா: பாராளுமன்றத்தில் ஆதரவு, வெளியில் எதிர்ப்பு, திமுகவின் இரட்டை வேடம்

பாராளுமன்ற மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுகவின் 37 எம்பிக்களும் ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதாவை ஏன் ஆதரித்தோம் என்பதற்கு திமுக எம்பி ஆ.ராசா ஒரு நீண்ட விளக்கத்தையும் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கியிருந்தார்
 
இந்த நிலையில் என்.ஐ.ஏ மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தனது கட்சி அரசியல் லாபத்திற்காகப்  பயன்படுத்துவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை. சி.பி.ஐ. போன்ற சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளை "அரசியல் மயமாக்கியது" போல், அவற்றின் தொடர்ச்சியாக, "பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள" அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனது கட்சிஅரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு டி.ஐ.ஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணை பிரிவுகளும் இருக்கின்றன. "க்யூ பிராஞ்ச்" என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது மட்டுமின்றி - மாண்புமிகு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
 
ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி- தேசியப் புலனாய்வு முகமையை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து- இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் அபாயகரமான போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். பயங்கரவாதம் எந்த மதத்தின் நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. எந்த மதமும் அதை ஆதரிக்கப் போவதுமில்லை. சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரிடமும் அத்தகைய உயர்ந்த ஒருமைப்பாட்டு உணர்வும், சிறப்பான நாட்டுப்பற்றும் தழைத்தோங்கி இருக்கிறது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு புரிந்து கொண்டு- அனைத்து மதத்தினரும் நாட்டின் மீது கொண்டுள்ள அந்த மாறாப்பற்றுதான் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாபெரும் வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முதலில் உணர வேண்டும். தமிழகத்தில், தேசியப் புலனாய்வு முகமை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்ந்தால், பாராளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் உரிய வகையில் கடுமையான முறையில், ஜனநாயக வழிகளில், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அறிவித்திட விரும்புகிறேன்.
 
இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துவிட்டு தற்போது வேலூர் தேர்தலுக்காக இந்த மசோதாவிற்கு எதிராக திமுக தரப்பில் இருந்து அறிக்கை வெளிவந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.